ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்ட பொதுமக்கள்

பழனியை அடுத்த கீரனூர் பேரூராட்சி 3-வது வார்டு செம்மண்குழி பகுதியை சேர்ந்த மக்கள் தங்களின் ரேஷன், ஆதார் கார்டுகளை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 19:30 GMT

பழனியை அடுத்த கீரனூர் பேரூராட்சி 3-வது வார்டு செம்மண்குழி பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் தங்களின் ரேஷன், ஆதார் கார்டுகளை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பழனி தாசில்தார் பழனிசாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதி மக்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. அதேநேரத்தில் பேரூராட்சி சார்பில் வீட்டுவரி கூடுதலாக வசூலிக்கின்றனர். எனவே தான் ரேஷன்கார்டு, ஆதார்கார்டுகளை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாசில்தார் கூறுகையில், சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் கீரனூரில் வீட்டுவரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா? என பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, செம்மண்குழி பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகளுக்கு தனித்தனி குடிநீர் இணைப்பு பெற மக்கள் விண்ணப்பித்தனர். ஆனால் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு பெற கட்டாயம் வீட்டுவரி செலுத்த வேண்டும். அதுவும் அரசு நிர்ணயித்த தொகைதானே தவிர கூடுதல் தொகை எதுவும் கேட்கப்படவில்லை என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்