சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் பொதுமக்கள் அச்சம்
நரிக்குடி அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் தொட்டி
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், பூமாலைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு குண்டாறு பகுதியிலிருந்து போர்வெல் அமைத்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து கிராமத்திற்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
முத்துராமலிங்கம் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகே பள்ளிக்கூடம் மற்றும் ரேஷன் கடை ஆகியவை உள்ளன.
நடவடிக்கை
இந்த பகுதி பள்ளி மாணவ-மாணவிகளும், கிராம பொதுமக்களும் அதிகமாக நடமாடும் பகுதியாக இருந்து வருகிறது. இங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட பயப்படுகின்றனர்.
எனவே தொட்டி இடிந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக சேதமடைந்த தொட்டியை இடித்துவிட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.