ரேஷன்கடை கட்டக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்
அனுமதிக்கப்பட்ட இடத்தில் ரேஷன் கடை கட்டக்கோரி வாய்மேடு அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு:
அனுமதிக்கப்பட்ட இடத்தில் ரேஷன் கடை கட்டக்கோரி வாய்மேடு அருகே பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷன் கடை கட்ட தீர்மானம்
நாகை மாவட்டம் வாய்ேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் பழுதடைந்த கட்டிடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்களால் தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுவான இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் கட்டிடம் கட்ட தேவையான மூலப்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் ஒரு சிலர் அந்த இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு ஆட்சபனை தெரிவித்து வேறு ஒரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து அதற்கான முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது.
உண்ணாவிரத போராட்டம்
அனுமதி வழங்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய ரேஷன் கடை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கோவிந்தன் தலைமை தாங்கினார். வேதரத்தினம், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், பாலசுப்ரமணியம், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரங்கநாதன் வரவேற்றார்.இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஊராட்சி மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி அளித்த இடத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.