12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்?- மாணவ, மாணவிகளின் நேரடி பேட்டி
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்?- மாணவ, மாணவிகளின் நேரடி பேட்டி
மாணவர்களின் எதிர்காலத்துக்கும், உயர் கல்விக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்வாக பிளஸ்-2 தேர்வு உள்ளது. மிகமுக்கிய தேர்வு என்பதால் பல மாணவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. ஆனாலும் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் தொடங்கின. இதில் பிளஸ்-2 தேர்வுக்கு வராத மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் 200 பள்ளிக்கூடங்களில் படித்து வரும் 24 ஆயிரத்து 894 பேர் தேர்வு எழுத 105 மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 3 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் தமிழ் தேர்வு எழுத 2 ஆயிரத்து 290 பேர் வரவில்லை. ஆங்கில தேர்வுக்கு எழுத 1,676 பேர் வரவில்லை. மாநில அளவில் 50 ஆயிரத்து 674 பேர் தேர்வு எழுதவில்லை.
இது கல்வித்துறையில் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் மத்தியில் தற்போது படிப்பில் ஆர்வம் குறைந்துவிட்டதா? என்ற கேள்வி பலரின் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து தேர்வு எழுதாத மாணவர்கள், தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
குடும்ப செலவுக்கு...
சென்னிமலை அருகே அரசு உதவி பெறும் பள்ளி மாணவன்:-
நான் சென்னிமலை அருகே அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 வகுப்பு வரை மட்டுமே படித்தேன். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக பிளஸ்-2 வகுப்பில் சேரவில்லை. பள்ளிக்கூட நிர்வாகத்தினர் எங்கள் வீட்டுக்கு வந்து பிளஸ்-2 வகுப்பில் சேரும்படி வற்புறுத்தினார்கள். நான் தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு செல்வதால் தினமும் 300 ரூபாய் வரை வருமானம் பெற்று வருகிறேன். இந்த வருமானத்தை இழந்தால் குடும்ப செலவுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் பள்ளிக்கூடத்தில் சேர மறுத்து விட்டேன்.
என்னை போல் சென்னிமலை பகுதியில் பல மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேரவில்லை. நாங்கள் பள்ளிக்கூடத்தில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்காமல் இருந்ததால் இந்த ஆண்டு பிளஸ்-2 பொது தேர்வுக்கு எங்கள் பெயரிலும் தேர்வு எண் வந்துள்ளது. பிளஸ்-2 வகுப்பில் சேராதவர்கள் பெயரை கல்வித்துறை அதிகாரிகள் நீக்கி இருந்தால் தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக வராது.
தாய்-தந்தை
புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த மாணவர்:-
புஞ்சைபுளியம்பட்டி கே.வி.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். 11-ம் வகுப்பு தொழில் பிரிவில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது திடீரென எனது தாய்-தந்தை 2 பேரும் இறந்துவிட்டனர். இதனால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வருகிறேன். குடும்ப சூழ்நிலை காரணமாக புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வேலைக்கு செல்கிறேன்.
ஆனால் பள்ளிக்கூடத்துக்கு வர சொல்லி ஆசிரியர்கள் என்னை அழைக்கின்றனர்.
உடல்நலம் பாதிப்பு
அந்தியூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்:-
நான் தொழில் கல்வி பிரிவில் படித்து வந்தேன். கடந்த 3 மாதங்களாக எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் தொடர்ந்து பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இந்தநிலையில் தேர்வு எழுதினால் தோல்வி அடைந்து விடுவேன் என்ற பயத்திலேயே நான் தேர்வு எழுத செல்லவில்லை. சாதாரண தேர்வு என்றால் கூட கடைசி நேரத்தில் படித்தால் சமாளித்து விடலாம். படிக்காமல், வகுப்புக்கு செல்லாமல் எப்படி? பொதுத்தேர்வை எழுத முடியும்.
அம்மாபேட்டையை சேர்ந்த ஒரு மாணவி:-
கொரோனா தொற்று பரவல் காலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. தொடர்ந்து கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய போது சரியான மதிப்பெண்கள் எடுக்காததால் தோல்வி அடைந்தேன். அதனால் அதன் பிறகு பள்ளிக்கு செல்லும் விருப்பமில்லாத காரணத்தால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இருப்பினும் எனது பெயர் பள்ளி பதிவேட்டில் இருந்ததால் தொடர்ந்து படிப்பதற்காக ஆசிரியர்கள் தரப்பில் கேட்டுக்கொண்டனர். ஆனால் படிக்க விருப்பம் இல்லாமல் வீட்டிலேயே இருந்து விட்டேன்.
குடும்ப சூழல்
ஈரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து தேர்வு எழுத வர முடியாத மாணவி:-
எனது வீட்டில் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை. அவரை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் கடந்த ஒரு ஆண்டாக என்னால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனது பள்ளிக்கூட தலைமை ஆசிரியை உள்பட ஆசிரியைகள் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு பள்ளிக்கூடத்துக்கு அழைப்பார்கள். எனக்கு ஆசைதான். ஆனால் எனது குடும்ப சூழல். ஒரு முறை எனக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்தபோது கூட எங்கள் தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியைகள் எச்சரித்து, என்னை மீண்டும் படிக்க வைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்கள். உண்மையில் என்னால் முடியவில்லை.
வேலைக்கு சென்றேன்
மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாணவர்:-
நான் சராசரியாக படிக்12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் பேர் மொழித்தேர்வை எழுதாமல் போனது ஏன்?- மாணவ, மாணவிகளின் நேரடி பேட்டிகும் மாணவன். 2 ஆண்டுகள் கொரோனா பாதிப்பின் போது நான் பள்ளிக்கூடத்துக்கு செல்லவில்லை. 10-ம் வகுப்பில் பள்ளிக்கூடம் போகாமல், தேர்வு எழுதாமல் வெற்றி பெற்றுவிட்டேன். இதனால் 11-ம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒரு நாள் இடைவெளி விட்டு வகுப்புகள் நடந்தன. அந்த நேரத்தில் எனது நண்பர்கள் சிலர் வேலைகளுக்கு சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன். இப்போது விலை உயர்ந்த செல்போன் வைத்திருக்கிறேன். 10-ம் வகுப்பு தேர்வே எழுதாத எனக்கு, பிளஸ்-1 வகுப்பில் சரியாக வகுப்பு நடக்காமல் பொதுத்தேர்வு என்றால் எப்படி எழுத முடியும். பிளஸ்-2 தொடர்ந்து படித்தால், பிளஸ்-1 தேர்வினையும் எழுதவேண்டும் என்றார்கள். எனவேதான் நான் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு பயந்து விட்டேன்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.