கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டம்

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-17 21:21 GMT

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நெல்லை முன்னீர்பள்ளம் மருதம்நகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி குணசேகரனை (வயது 37) கடந்த 14-ந்தேதி இரவில் 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியது. இதில் காயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருதம்நகர் பொதுமக்கள் நேற்று மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் மருதம் ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முத்துபாண்டி ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர்.

அவர்கள், கலெக்டர் அலுவலக சாலையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் மீஹா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து அவர்கள், கலெக்டரிடம் மனு வழங்கினர். அதில், ''சமீப காலமாக எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு அரசு துறை சார்ந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கருதுகிறோம். எனவே மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி இதுபோன்ற தாக்குதலை நிறுத்த நிரந்தர தீர்வு காண வேண்டும். கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் 2 நாட்களுக்கு மேலாகியும் போலீசார் கைது செய்யவில்லை. அவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். மருதம்நகரில் உள்ள டாஸ்மாக் கடையால்தான் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே அந்த கடையையும் அகற்றி, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்'' என்று கூறி உள்ளனர்.

அம்பை தாலுகா கோவில்குளம் அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் குருவையா, முன்னாள் உறுப்பினர் வெள்ளத்துரை, வர்கீஸ்ராணி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அதில், ''ரெங்கசமுத்திரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு எங்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் நாங்கள் வீடு கட்ட செல்லும்போது அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் பட்டா ரத்தாகி விட்டதாக கூறுகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி எங்களது வீட்டுமனையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும்'' என்று கூறியுள்ளனர். பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ''உயர்நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக இயங்கி வரும் தனியார் ஆஸ்பத்திரி கட்டிடத்தை எந்தவித கால தாமதமும் இல்லாமல் சீல் வைக்க வேண்டும். இதற்கு அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறி உள்ளார்.  


பொதுமக்கள் தர்ணா போராட்டம்

Tags:    

மேலும் செய்திகள்