கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மலைக்கோட்டை:
திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் அடிப்படை தேவைகளான தரமான சாலைகளும், புதிய வாய்க்கால் பாலமும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக சாலைகளை கடப்பதற்கு தேவையான போக்குவரத்து நெறிமுறைகளை அமைத்துக் கொடுக்க வேண்டி மேல சிந்தாமணி பொதுமக்கள் நேற்று காலை சிந்தாமணி அண்ணாசிலை அருகில் கவன ஈர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செந்தில்நாதன் தலைமை தாங்கினார். இதில் மேலசிந்தாமணி, கீழசிந்தாமணி, பூசாரித்தெரு, பதுவைநகர், வெனிஸ்தெரு, அந்தோணியார் கோவில் தெரு, நாடார் தெரு, காந்தி நகர், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவற்றை விரைவில் நிறைவேற்றகோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில், பழைய கரூர் ரோட்டில் உள்ள பழைய வாய்க்கால் பாலத்தை புதிய பாலமாக மாற்றி அமைக்க வேண்டும். அண்ணாசிலை முதல் பழைய கரூர் ரோடு குடமுருட்டி வரை புதிய தார் சாலை அமைக்க வேண்டும். அண்ணா சிலையை கடப்பதற்கு சிரமமாக உள்ள காங்கிரீட் தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும். அண்ணாசிலை முதல் பெரியசாமி டவர் வரை உள்ள ஒரு வழி பாதையாக உள்ளதை இரு வழி பாதையாக மாற்றித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் முத்துக்குமார், கங்கைசெல்வம், ஜெயராமன், இப்ராம்ஷா, சரவணன், மனோகரன், கலைமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 250 பேர் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.