அனைத்து சமூகத்தினரையும் ஜல்லிக்கட்டு விழா குழுவில் சேர்க்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அனைத்து சமூகத்தினரையும் ஜல்லிக்கட்டு விழா குழுவில் சேர்க்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-15 19:31 GMT

லால்குடி தெற்கு தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 19-ந்தேதி நடத்த முடிவு செய்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் லால்குடி எல்.அபிஷேகபுரத்தைச் சேர்ந்த பாரதிமோகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தார். அதில், அனைவருக்கும் பொதுவான இடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடு இல்லாமல், அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் விழாக்கமிட்டியில் சேர்த்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை ஆய்வு செய்தனர். இதனிடையே ஜல்லிக்கட்டை பொது இடத்தில் நடத்த வேண்டும். அனைத்து சமூகத்தினரும் விழா குழுவில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தி லால்குடி சுற்றுவட்டாரத்துக்கு உட்பட்ட 48 கிராம மக்கள் லால்குடி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த அறிவித்து இருந்தனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு அனுமதிகொடுக்காததால் லால்குடி நகராட்சி அலுவலகம் எதிரே 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்