மாற்றுப்பாதையில் செயல்படுத்த கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை அருகே காவிரி-குண்டாறு-வைகை திட்டத்தினை மாற்றுப்பாதையில் செயல்படுத்த கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-29 17:51 GMT

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-குண்டாறு-வைகை நதி இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கவிநாடு கண்மாயில் இருந்து பிரகதம் நத்தம் பண்ணை, அகரப்பட்டி பகுதி வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் விவசாய பகுதி அதிகம் உள்ளதால் 32 கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் விவசாய விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் பாதிக்காமல் இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்தவும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அப்பகுதி பொது மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போராட்டத்திற்காக பொதுமக்கள் இன்று காலை புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய் பகுதியில் திரண்டனர். மேலும் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு தயாராகினர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

பாதுகாப்பு பணியில் திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அமைதிப்பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். நாளை (வெள்ளிக்கிழமை) வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் அமைதிப்பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்