நெற்றியில் பட்டை, நாமம் போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

மந்தாரக்குப்பம் அருகே அடிப்படை வசதிகள் செய்ய கோரி நெற்றியில் பட்டை, நாமம் போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-30 18:41 GMT

மந்தாரக்குப்பம், 

நடவடிக்கை இல்லை

மந்தாரக்குப்பம் அருகே கம்மாபுரம் ஒன்றியம் தெற்கு சேப்ளாநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு தெரு காலனி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது பகுதிக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆர்ப்பாட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெற்றியில் பட்டை போட்டு அரை நிர்வாணமாக நின்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை அப்பகுதி பொதுமக்கள் அங்குள்ள பிரதான சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஆண்கள் அரை நிர்வாணமாக நின்றபடியும், பெண்கள் நெற்றியில் பட்டை, நாமம் போட்டு நின்றபடி அடிப்படை வசதிகள் செய்து தர கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து உங்களது கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்