சிவன் கோவிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் -பொதுமக்கள்

குத்தாலம் அருகே சிதிலமடைந்த பழமையான சிவன் கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-09 16:43 GMT

குத்தாலம் அருகே சிதிலமடைந்த பழமையான சிவன் கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழர், நாயக்கர் காலத்து கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி மாங்குடி கிராமத்தில் பழமையான சிவலோக நாயகி சமேத சிவலோகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் முகப்புத் தோற்றம் வவ்வால் நெற்றி அமைப்பில் உள்ளதால் சோழர் காலத்து கோவில் எனவும், முழுமையான செங்கல் திருப்பணியால் ஆன கோவிலாக இருப்பதால் நாயக்கர் காலத்து கோவில் எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இந்தகோவிலில் மூலவராக சிவலோகநாதரும், அம்பாள் சிவலோக நாயகியும் உள்ளனர். சாமி சன்னதிக்கு முன்பு வலதுபுறம் விநாயகர் மற்றும் பெருமாளும், இடதுபுறம் காசி விஸ்வநாதரும், முருகரும், கோவில் வெளிப்பிரகாரத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளனர்.

செடி,கொடிகள் முளைத்துள்ளன

இந்த கோவிலின் பராமரிப்புக்கு என 25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளதால் போதிய வருவாய் இன்றி கோவிலை பராமரிக்க முடியாமல் உள்ளது. கோவிலை சுற்றிலும் 2 தீர்த்தங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் மிக்க இந்த கோவில் நாளடைவில் சிதிலமடைந்து சுற்றுச் சுவர்கள், கோவிலின் முன்புற மண்டபம் என அனைத்தும் விழுந்து மரங்கள், செடி,கொடிகள் முளைத்துள்ளன. தற்போது சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன.

மண்டபங்கள் அனைத்தும் சேதம் அடைந்ததால் அங்கிருந்த விக்ரகங்கள் அனைத்தும் சுவாமி சன்னதிக்கு முன்பு வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 30 ஆண்டுகளாக பூஜைகள் நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக கிராமத்தை சேர்ந்த சரவணன் என்ற இளைஞர் ஞானசேகரன் என்ற பூசாரியை நியமித்து ஒரு கால பூஜையை நடத்தி வருகிறார். இதுவரையில் திருமணஞ்சேரி கோவில் செயல் அலுவலராக பொறுப்பேற்ற நிர்மலா தேவி இந்த கோவிலின் நிலையை கண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவித்துள்ளார்.

பக்தர்களும் உதவுமாறு....

இதனையடுத்து பழமை மாறாமல் கோவிலை மறு சீரமைப்பு செய்து குடமுழுக்கு பணிகளை செய்து கொடுப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

எனவே தமிழக அரசு நிதி ஒதுக்கி கோவிலை விரைந்து பழமை மாறாமல் மறுசீரமைப்பு திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்திக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பக்தர்களும் தங்களால் இயன்ற நிதியை கொடுத்து பழமையான சிவன் கோவிலில் திருப்பணிகளை செய்திட உதவுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்