விழுப்புரத்தில்ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரத்தில் ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-17 18:45 GMT

விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே கேட் அருகில் தரைப்பாலம் உள்ளது. சாலாமேடு மற்றும் சுற்றியுள்ள திருப்பாச்சனூர், காவணிப்பாக்கம், ராமநாதபுரம், தளவானூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக விழுப்புரம் வருவதற்கு இந்த தரைப்பாலத்தின் வழியாகவே வந்து செல்கின்றனர்.

அதுபோல் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் விழுப்புரம் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி- கல்லூரிகளில் படித்து வருவதால் அவர்களும் இந்த தரைப்பாலத்தின் வழியாகவே விழுப்புரம் வந்து செல்கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் வசதிக்காக விழுப்புரத்தில் இருந்து சாலாமேடு, திருப்பாச்சனூர் வழியாக தளவானூருக்கு அரசு டவுன் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்யப்படும் விவசாய விளைபொருட்களை விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வருவதற்கும், அதுபோல் கரும்புகளை அரவைப்பணிக்காக முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லவும் அந்த தரைப்பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

மேம்பாலம்

இவ்வாறு போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த தரைப்பாலத்தில், மழைக்காலத்தின்போது தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் கிளை ஆறான மலட்டாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்பட்சத்தில் தரைப்பாலம் மூழ்கி அந்த பாலத்திற்கு மேல் 3 அடிக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக அந்த சமயத்தில் இவ்வழியாக செல்லக்கூடிய வாகன போக்குவரத்து தடைபடுகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர வேண்டுமென சாலாமேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே கேட் அருகில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக உயர்த்தி கட்ட அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள தரைப்பாலத்தை உயர்த்தி மேம்பாலமாக கட்டும் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் தொடங்கப்பட்டது.

ஆமை வேகத்தில்

இந்த மேம்பால பணிகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாகவும், மும்முரமாகவும் நடந்து வந்த நிலையில் பில்லர் போடப்பட்டு கான்கிரீட் கம்பிகள் கட்டும் பணிகள் நடந்து வந்த சூழலில் கடந்த சில வாரங்களாக பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இடையிடையே கோடை மழையும் அவ்வப்போது பெய்து வந்ததால் பாலம் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.

இன்னும் சில மாதங்களில் பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் ஏற்கனவே இருந்த தரைப்பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு மேம்பால பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் அப்புறப்படுத்தப்பட்டதால் தற்காலிகமாக அதன் அருகிலேயே மண் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டு வாகன போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் எதிர்வரும் பருவமழை காலத்திற்குள் இப்பணிகளை முடிக்காவிட்டால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்பட்சத்தில் தற்காலிக மண் சாலை, தண்ணீரில் அடித்துச்செல்லப்பட வாய்ப்புள்ளது. அதுபோன்ற நிலை ஏற்பட்டால் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும்.

விரைந்து முடிக்கப்படுமா?

ஆகவே மழைக்காலம் தொடங்குவதற்குள் மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்