தீர்க்கப்பட வேண்டிய உடனடி பிரச்சினைகள்

சிவகங்கை மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய உடனடி பிரச்சினைகள் தொடர்பாக பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-11-18 18:45 GMT

சிவகங்கை மாவட்டத்தில் தீர்க்கப்பட வேண்டிய உடனடி பிரச்சினைகள் தொடர்பாக பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

சங்கரபதி கோட்டை

ராமஅமிர்தம் (தேவகோட்டை ரஸ்தா):- காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் சங்கரபதி கோட்டை உள்ளது. சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக போரிடுவதற்காக சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் மற்றும் படை வீரர்கள் பயிற்சி பெற்ற இந்த கோட்டையானது பல்வேறு வரலாற்று கதைகளை கூறும் வகையில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோட்டை சிதிலமடைந்துள்ளது.

இந்த கோட்டையை சீரமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்ட சபையில் அறிவித்தார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த வரலாற்று சின்னம் மறைக்கப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த கோட்டையை பராமரித்து இதை சுற்றுலா தலமாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி தண்ணீர் இணைப்பு

தினேஷ்பொன்னையா (சமூக ஆர்வலர், சிங்கம்புணரி):- சிங்கம்புணரி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி வரை வருகின்ற காவிரி தண்ணீரை சிங்கம்புணரி வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வரை பாலாறு வழியாக கொண்டு சேர்ப்பதற்காக துவரங்குறிச்சிக்கும், கொட்டாம்பட்டி அருகே உள்ள பொட்டபட்டிக்கும் இடையிலான சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு இணைப்பு அமைத்தால் காவிரி தண்ணீரை திருச்சியில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிங்கம்புணரி வழியாக செல்லும் பாலாற்று பாதையில் கொண்டு செல்ல முடியும்.

இதனால் பல ஆயிரம் எக்டேர் நிலபரப்பு பாசன வசதி பெற்று விவசாயம் தடையின்றி நடைபெறும். அதுதவிர குடிதண்ணீர் பிரச்சினையும் இருக்காது. எனவே இந்த இடைப்பட்ட சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் தண்ணீரை கொண்டு செல்வதற்காக பாதை அமைத்து அதில் காவிரி தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

மாவட்ட விவசாய சங்க செயலாளர் காமராஜ் (தேவகோட்டை):-

தேவகோட்டையில் பிரசித்தி பெற்ற கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு இங்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக மாடுகளை கோவிலுக்கு நேர்ந்து விடுகின்றனர். இவ்வாறு பல ஆண்டுகளாக பக்தர்கள் நேர்ந்து விட்ட இந்த மாடுகள் பல்கி பெருகி தேவகோட்டை நகர வீதிகளில் சுற்றி திரிகின்றன. மேலும், விவசாயம் தொடங்கியவுடன் அங்கு சென்று பயிர்களை தின்றுவிடுகிறது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாலையில் மாடுகள் திரிவதால் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே மாடுகளை எவ்வாறு பராமரிப்பது என அரசு திட்டமிட்டு பொதுமக்களுக்கு இடையூறு இன்றியும், விவசாயிகள் பாதிக்காத வண்ணமும் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்