டெங்குவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை: கமிஷனர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

டெங்குவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2023-10-13 18:48 GMT

சென்னை,

சென்னை கோயம்பேடு மலர் அங்காடியில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார். பின்னர், உதயம் தியேட்டர் அருகில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று இருந்த வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.

தொடர்ந்து நிருபர்களிடம் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் என்பது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். பொதுமக்கள் பீதி அடைய வேண்டிய தேவையில்லை. அதே நேரத்தில், வீடுகளில் தண்ணீரை திறந்து வைப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்க நாமே காரணமாகி விடுகிறோம். கொசு உற்பத்தியாகும் இடங்களை முழுமையாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்து உட்கொள்ளக்கூடாது. அரசு ஆஸ்பத்திரிகள் மட்டுமில்லாமல் பொது இடங்களிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் 4 ஆயிரத்து 572 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

ஒத்துழைப்பு தேவை

காய்ச்சல் முகாம்களில் சித்தா மற்றும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை விரும்புபவர்களுக்கு அந்த மருந்துகளும் வழங்கப்படுகிறது. டெங்குவை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு 382 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 80 ஆக இருந்த பாதிப்பு இந்த மாதம் 31 ஆக குறைந்துள்ளது. கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் கட்டிடங்களில் தண்ணீர் தேக்கி வைத்த உரிமையாளர்களுக்கு ரூ.21 லட்சத்து 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொது இடங்களில் மாடுகள் சுற்றித்திரிந்தால் உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த வாரம் மட்டும் 337 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 600-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்