தண்ணீரில் புழுக்கள் வருவதாக பொதுமக்கள் புகார்; குடிநீர் தொட்டிகளில் ஏறி மண்டல தலைவர் ஆய்வு

திருவொற்றியூரில் குடிநீரில் புழுக்கள் வருவதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததால் குடிநீர் தொட்டிகளில் ஏறி மண்டல குழு தலைவர் ஆய்வு செய்தார். அதில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

Update: 2023-09-29 08:49 GMT

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு புழல் ஏரியில் இருந்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்தும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் கோமாதா நகர், காலடிப்பேட்டை, பட்டினத்தார் கோவில், பெரியார் நகர் மற்றும் சில பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் மற்றும் சிவப்பு நிற புழுக்கள் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பெண்கள் கழிவுநீர் கலந்த தண்ணீரை பாட்டிலில் பிடித்து வந்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு கேட்டபோது, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து வரும் தண்ணீரில் மாசு கலந்து வருவதாக மலுப்பலாக பதில் கூறினர்.

இதையடுத்து மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, புழல் ஏரி மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் திருவொற்றியூருக்கு தண்ணீர் வரும் வழியில் சென்று ஆய்வு செய்தார். ஆனால் அங்கு வரும் குடிநீரில் மாசு கலந்து வரவில்லை என்பது தெரிந்தது. பின்னர் குடிநீர் வாரிய செயற்பொறியாளர் அன்பழகன், உதவி செயற்பொறியாளர் தமீம் மற்றும் அதிகாரிகளுடன் சென்று திருவொற்றியூர் தேரடி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி ஆய்வு செய்தார். மேலும் 1.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டியின் உள்ளேயும் இறங்கி ஆய்வு செய்தார்.

அதில் கழிவுகளுடன் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் தம்ளர் உள்பட ஏராளமான குப்பைகள் சுமார் 5 அடி ஆழத்துக்கு தேங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள 5 மேல்நிலை குடிநீர் தொட்டிகளையும் உடனடியாக சுத்தம் செய்து பொதுமக்களுக்கு தரமான குடிநீர் வழங்கவும், குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். அதன்பேரில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்