காற்று மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார்: மந்தாரக்குப்பம் பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு

காற்று மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரையொட்டி மந்தாரக்குப்பம் பகுதி கிராமங்களில் மாசு கட்டுப்பாட்டு வாாிய அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-05-10 19:01 GMT

மந்தாரக்குப்பம், 

நெய்வேலி, மந்தாரக்குப்பம் பகுதி கிராமங்களில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மந்தாரக்குப்பம் அடுத்த வடக்குவெள்ளூர், தொப்ளிகுப்பம், ஆதண்டார்கொள்ளை மற்றும் கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட 1, 2, 3 வார்டுகள், அகிலாண்ட கங்காபுரம் ஆகிய பகுதிகளில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக சுவாசக்கோளாறு, சிறுநீரக பிரச்சினை, குடிநீரில் மண் கலங்கி வருவது போன்ற பல்வேறு பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

அதிகாரி ஆய்வு

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறை உதவி பொறியாளர் சரண்யா நேற்று வடக்குவெள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காற்று மாசடைந்துள்ளதா? என ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதி மக்கள், நாங்கள் வீட்டின் வெளியே அமர்ந்து சாப்பிட முடியவில்லை. துணி துவைத்து வெளியே காய வைக்க முடியவில்லை. அனைத்து பொருட்களிலும் தூசி படிந்து விடுகிறது. இதனால் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அடிக்கடி செல்வதாக குற்றம் சாட்டினர். இதனை கேட்ட அதிகாரி, இதுபற்றி உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்