ஆதார்-ரேஷன்கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
பொதுப்பாதையை மீட்டு தரக்கோரி ஆதார், ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமர்நாத், மாவட்ட ஊராட்சி செயலாளர் கிரி உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மொத்தம் 320 பேர் மனு கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
பொதுப்பாதை ஆக்கிரமிப்பு
ஆத்தூர் தாலுகா சித்தரேவு கிராமம் நெல்லூர் பிரிவு பகுதி பொதுமக்கள் பொதுப் பாதையை மீட்டு தரக்கோரி ஆதார் அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைக்க போவதாக மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், நாங்கள் 30 குடும்பத்தினர் 20 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் நாங்கள் பயன்படுத்திய பொது பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப்பாதையை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தனர்.
கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி குறிஞ்சிநகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், குறிஞ்சிநகரில் பள்ளி அருகே 25 குடும்பத்தினர் 50 ஆண்டுகளாக வசிக்கிறோம். மேலும் முறைப்படி வீட்டுவரி உள்பட அனைத்து வரிகளும் செலுத்தி வருகிறோம். இந்தநிலையில் நாங்கள் பயன்படுத்திய பாதை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் நடக்க முடியவில்லை.பெண்கள் குடிநீர் எடுக்க செல்ல முடியவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் துணை ராணுவ வீரர்கள்
சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டி தீத்தாம்பட்டி காலனி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தீத்தாம்பட்டி காலனியில் 76 குடும்பங்கள் வசிக்கிறோம். கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் 40 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அந்த வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டதால், அச்சத்துடன் வசிக்கிறோம். வீட்டுக்குள் குழந்தைகளுக்கு தொட்டில் கூட கட்டுவதற்கு கூட பயமாக இருக்கிறது. எனவே தீத்தாம்பட்டி காலனியில் வசிக்கும் அனைத்து குடும்பத்துக்கும் அரசு சார்பில் புதிதாக வீடு கட்டி தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.
முன்னாள் மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் ஜம்மு-காஷ்மீர், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்பட பல மாநிலங்களில் கடும் சூழலில் பணிபுரிகின்றனர். தங்களுடைய உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக போராடுகின்றனர். அதில் பலர் தங்களுடைய உயிரை தியாகம் செய்துள்ளனர். இந்த வீரர்களை கவுரவிக்கும் வகையில் கேரள அரசு வரி சலுகை வழங்குகிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள முன்னாள் மத்திய துணை ராணுவப்படை வீரர்களுக்கு வீட்டுவரி, குடிநீர் கட்டண விலக்கு வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.