கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டையை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்
ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை பொதுமக்கள் ஒப்படைக்க வந்தனர்.
ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை பொதுமக்கள் ஒப்படைக்க வந்தனர்.
ஆதார் அட்டை
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு அருகே வள்ளிபுரத்தான்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன், மாநகர் மாவட்ட செயலாளர் அம்ஜத்கான் ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் தங்களது ஆதார் அட்டைகளை ஒப்படைப்பதற்காக கைகளில் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-
நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில் உள்ளதால், விலையில்லா வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், அதேபகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் நத்தம் புறம்போக்கு நிலம் 5 ஏக்கரை ஆக்கிரமித்து உள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டும். அங்கு எங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
டாஸ்மாக் கடை
ஈரோடு சம்பத்நகரை சேர்ந்த ரவிச்சந்திரனின் மனைவி சாந்தி என்பவர் கொடுத்த மனுவில், "ஈரோடு நசியனூர் ரோட்டில் எங்களுக்கு சொந்தமான கடையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால், டாஸ்மாக் கடையை காலி செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மனு அளித்து வருகிறேன். இதுவரை கடை இடமாற்றம் செய்யப்படவில்லை. எனவே டாஸ்மாக் கடையை காலிசெய்ய வேண்டும்", என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், "கொடுமுடி பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் பயணிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. சட்ட விரோதமாக 24 மணிநேரமும் மது விற்பனை நடக்கிறது. எனவே அந்த கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்து உள்ளோம்", என்று கூறப்பட்டு இருந்தது.
257 மனுக்கள்
ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனியை சேர்ந்த டிரைவர் மாதேஸ்வரன் என்பவர் கொடுத்த மனுவில், "நான் வாடகை கார் வைத்து ஓட்டி வருகிறேன். கடந்த மே மாதம் ஒரு ஷோரூமில் இருந்து புதிய கார் வாங்கினேன். அதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக ஷோரூமில் சென்று கேட்டதற்கு நான் வாங்கிய கார் வகைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறுகிறார்கள். என்னை போன்று மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் பேர் காரை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே காருக்கு பதிவு எண் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று கூறி இருந்தார்.
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 257 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.