ஜல்லிக்கட்டு நடந்த வாடிவாசலை பொதுமக்கள் முற்றுகை

ஜல்லிக்கட்டு நடந்த வாடிவாசலை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-04-07 21:31 GMT

திருவெறும்பூர்:

வாகனங்களை மறித்து போராட்டம்

திருச்சி தெற்கு காட்டூர் அழகு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாநகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட காட்டூர் பாலாஜி நகர் விரிவாக்க பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமை தாங்கி, கொடியசைத்து ஜல்லிக்கட்டை காலை 8.15 மணிக்கு தொடங்கி வைத்தார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் முதலாவதாக அழகு முத்துமாரியம்மன் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் உரிமையாளரிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும், மேலும் அப்பகுதியில் உள்ள பாப்பாக்குறிச்சி, கீதாபுரம், காந்திபுரம், வீதி வடங்கம், மஞ்சத்திடல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு, ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர்களை சேர்ந்தவர்கள், தங்கள் பகுதி வழியாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து காளைகள் வரக்கூடாது என்று கூறி, வெளியூரில் இருந்து காளைகளை ஏற்றி வந்த வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை-தடியடி

இதையறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிரடியாக வந்து ஜல்லிக்கட்டு நடந்த வாடிவாசல் பகுதியை முற்றுகையிட்டு, ஜல்லிக்கட்டை நிறுத்துமாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் உள்ளவர்களின் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க முறையாக டோக்கன் வழங்கப்படவில்லை என்று கூறி, போலீசார் மற்றும் விழா கமிட்டியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டினார்கள்.

இதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் வாடிவாசலுக்கு அழைத்து வந்தபோது ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு காளைகளுடன் குவிந்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி, சிலரை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்களிடம், அனைத்து மாடுகளும் கண்டிப்பாக அவிழ்த்து விடப்படும் என்றும், எந்த ஒரு பாரபட்சமுமின்றி டோக்கன் முறைப்படி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், எனவே அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் துணை சூப்பிரண்டு அறிவழகன் ஒலிபெருக்கியின் மூலம் கூறினார்.

846 காளைகள் சீறிப்பாய்ந்தன

இதையடுத்து அனைத்து காளைகளின் உரிமையாளர்களும் வரிசையில் நின்று மாடுகளை அவிழ்க்க முற்பட்டனர். ஆனாலும் சிலர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு பரிசுகள் வழங்கியவர்கள், அவ்வாறு பரிசு பொருட்களை வழங்கியபோதும், தங்களுக்கு உரிய டோக்கன் ஜல்லிக்கட்டு குழுவின் சார்பில் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.

இந்த பிரச்சினைகளால் காலை 9.30 மணி முதல் 10.15 மணி வரை ஜல்லிக்கட்டு தடைபட்டது. பின்னர் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மாலை 4.30 மணி வரை நடந்த இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம் 846 காளைகள் மற்றும் 228 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். அப்போது சில காளைகள் வீரர்களை பந்தாடின. இருப்பினும் மாடுபிடி வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர்.

35 பேர் காயம்

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் சைக்கிள், சோபா செட், டிரஸ்சிங் டேபிள், மேஜை, ரொக்கம், வெள்ளிக்காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 25 காளைகளை பிடித்த காட்டூரை சேர்ந்த லோகேஷ்(23) என்ற மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 10 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 21 பேர், பார்வையாளர்கள் 4 பேர் என மொத்தம் 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வேங்கூரை சேர்ந்த மோகன் (17), காட்டூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்த ரமேஷ் (25) உள்பட 9 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்