காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தில் இந்திரா நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் குடிநீர் குழாய் உடைந்ததால் அப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.