தனியார் நிறுவனத்தில் பொதுமக்கள் முற்றுகை
பணம் இரட்டிப்பு மோசடி தொடர்பாக தனியார் நிறுவனத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இரு தரப்பினர் மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ரெட்டியூரை சேர்ந்த ஒருவர், புதிய பஸ்நிலையம் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி் வருகிறார். இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது. இதை நம்பி ஏராளமானவர்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களில் ஏராளமானவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த நிறுவனத்தில் பணத்தை கட்டியவர்கள், தாங்கள் செலுத்திய பண்தை கேட்டு அந்த நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கும், முற்றுகையிட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் விரைந்து சென்று முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுவரை 4 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ.40 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். ஆனால் பணம் கட்டி ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளிக்கும்பட்சத்தில் விசாரணை நடத்தப்படும் என்றனர்.