தபால் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

கூடலூர் அருகே நியூஹோப் தபால் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-28 18:45 GMT

கூடலூர், 

கூடலூர் அருகே நியூஹோப் தபால் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தபால் நிலையம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நியூஹோப் பகுதியில் பேரூராட்சி அலுவலகம், அரசு பள்ளி, கிளை நூலகம், தபால் நிலையம் ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தேவைகளுக்காக தினமும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் புகுந்து பேரூராட்சி அலுவலகம், தபால் நிலையம், நூலகத்தை உடைத்து சேதப்படுத்தியது. இதேபோல் 2-வது முறையும் காட்டு யானைகள் நள்ளிரவு புகுந்து பொருட்களை சூறையாடியது. இந்தநிலையில் தபால் நிலையம் முறையாக திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

பொதுமக்கள் முற்றுகை

இந்தநிலையில் நேற்று தபால் நிலைய ஊழியர் அலுவலகத்திற்கு வந்தார். இருப்பினும் தபால் நிலையத்தை திறக்காமல் இருப்பது குறித்து பொதுமக்கள் அவரிடம் விசாரித்தனர். தபால் சேவையை பெற கூடலூரில் உள்ள அலுவலகத்திற்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது. மேலும் காட்டு யானைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் அலுவலகத்தை சீரமைக்க முடியவில்லை. இனிவரும் நாட்களில் கூடலூருக்கு செல்லும்படி தபால் ஊழியர் கூறியதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், திறக்கப்படாததை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- இவ்வளவு ஆண்டு காலம் செயல்பட்டு வந்த தபால் நிலையத்தை ஊழியர்கள் முறையாக திறப்பதில்லை. இதனால் வயதானவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் தொலைவில் உள்ள கூடலூருக்கு சென்று வருவது இயலாத காரியம். எனவே, நியூஹோப்பில் தபால் நிலையம் தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்