பொதுமக்கள் சாலைமறியல்

Update: 2023-07-19 19:30 GMT

தேவூர்:-

சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி புள்ளாக்கவுண்டம்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கலங்கலான குடிநீர் வினியோகம்

தேவூர் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டி கீழுரில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து சங்ககிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சங்ககிரி புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக ஆற்று குடிநீரில் குப்பைகள் கலந்து தண்ணீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் கிராம மக்கள் மர்ம காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டனர். கலங்கலான குடிநீர் வினியோகத்தால் தான் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று எடப்பாடி-குமாரபாளையம் செல்லும் பிரதான சாலைக்கு திரண்டு வந்தனர்.

அங்கு அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கலங்கலான குடிநீர் நிரப்பப்பட்ட குடம், வாளியையும் சாலை மறியல் நடந்த இடத்தில் வைத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை

போராட்டம் குறித்து தகவல் அறிந்து, தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்பு மற்றும் போலீசார், சங்ககிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜூதீன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் இந்து, தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஒரு வாரத்திற்குள் கலங்கல் இன்றி சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் எடப்பாடி-குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்