சேலம் களரம்பட்டியில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

சேலம் களரம்பட்டியில் சாலை வசதி கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-19 20:47 GMT

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் 57-வது வார்டுக்கு உட்பட்ட வீரபாண்டி தெரு, புலிக்கார தெரு, களரம்பட்டி மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும், இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடமும், வார்டு கவுன்சிலரிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், 57-வது வார்டு தே.மு.தி.க. செயலாளர் சங்கர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலை வசதி கேட்டு களரம்பட்டி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், சாக்கடை கால்வாய், சாலை வசதி செய்து தராததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்