நில அளவீடு செய்ய வந்த குழுவுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
பழங்குடியினருக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் நில அளவீடு செய்ய வந்த குழுவுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரம்:
பழங்குடியினருக்கு பட்டா வழங்கும் திட்டத்தில் நில அளவீடு செய்ய வந்த குழுவுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசின் 2006 வன உரிமைச் சட்டத்தின் படி குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகாடுகளில் வாழும் ஆதிவாசி காணி பழங்குடி மக்களுக்கு கையிருப்பு நிலங்களுக்கு அதிக பட்சம் 10 ஏக்கருக்கு மிகாமல் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பேச்சிப்பாறை அருகே முடவன் பொற்றை பழங்குடி குடியிருப்பில், கிராமசபை மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில், வருவாய்த்துறையால் நியமிக்கப்பட்ட குழுவினர் மற்றும் வனத்துறையினர் நேற்று நவீன கருவிகளுடன் அளவீடு செய்ய வந்தனர். அப்போது பயனாளிகள் தேர்வில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்களில் ஒரு தரப்பினர் அளவீடு செய்யும் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அளவீடு செய்யவும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அளவீடு செய்யும் குழுவினர் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.