எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் தேர்வு தொடங்கியது. இதைத் தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு கடந்த 20-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய 5289 பேரில் 2249 மாணவர்களும், மாணவிகள் 2564 பேர் மொத்தம் 4813 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 91 சதவீத தேர்ச்சியாகும்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 4559 பேரில் மாணவர்கள் 1873 பேரும், மாணவிகள் 2487 பேரும் என மொத்தம் 4360 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96 சதவீத தேர்ச்சியாகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விரைவில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உயர் கல்வி படிக்க வசதியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இதனை கல்வி மாவட்ட அலுவலர் (பொறுப்பு) வெங்கடேஷ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொள்ளாச்சி நேதாஜி ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை கோமதி மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கினார்.