10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-21 08:43 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகின. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் தேர்வு எழுதினார்கள். அந்த வகையில் 31 ஆயிரத்து 44 பேர் தேர்வை எழுதவில்லை.

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 42 ஆயிரத்து 519 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு எழுதியவர்களில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.

இந்த நிலையில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் அல்லது http://dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்