அரசு-மினி பஸ்களை நிறுத்த தனித்தனி இடம் ஏற்பாடு

திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் டிைரவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அரசு, மினி பஸ்களை நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டது.

Update: 2023-07-01 18:45 GMT

திங்கள்சந்தை,

திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் டிைரவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அரசு, மினி பஸ்களை நிறுத்த தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டது.

டிரைவர்கள் இடையே மோதல்

திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றி செல்வது சம்பந்தமாக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கும், மினி பஸ் ஊழியர்களுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த பிரச்சினை தொடர்பாக அரசு பஸ் டிரைவர்களுக்கும், மினி பஸ் டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் திங்கள்சந்தை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் மகேஷ், குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மினி பஸ் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

தனித்தனி இடம்

இதில் பஸ் நிலையத்தின் மையப் பகுதியான மின்விளக்கு தூணின் அருகே கிழக்கு மேற்காக தடுப்பு வேலி வைப்பது எனவும், அந்த தடுப்பு வேலியின் வலது பக்கம் அதாவது புறக்காவல் நிலையம் முன்பு மினி பஸ்களை நிறுத்துவது என்றும், இடது பக்கம் அரசு பஸ்களை நிறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கருங்கல், நாகர்கோவில், குலசேகரம், தக்கலை மார்க்கம் செல்லும் அனைத்து அரசு மற்றும் மினி பஸ்களும் வலது ஓரமாக செல்ல வேண்டும் என்றும் மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், பெத்தேல்புரம் மார்க்கம் செல்லும் அனைத்து பஸ்களும் இடது புறமாக வெளியே செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதை இரு தரப்பினரும் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து அரசு மற்றும் மினி பஸ் டிரைவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து பஸ்களை இயக்கி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்