ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டப் பணியின் காரணமாக ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-07-20 02:00 GMT

பொள்ளாச்சி

கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டப் பணியின் காரணமாக ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

பயோ மெட்ரிக் கருவி ஒப்படைப்பு

கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெறும் தகுதி, தகுதி இல்லாத பயனாளிகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பதாகை வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு பயோ மெட்ரிக் கருவிகள் தேவைப்படுகின்றன. இதனால் ரேஷன் கடைகளில் விரல் கைரேகை பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த பயோ மெட்ரிக் கருவிகள் குடிமைப்பொருள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

பயோ மெட்ரிக் கருவியை பயன்படுத்தி வெளியூர் குடும்ப அட்டைதாரர்களாக இருந்தாலும் முகவரி மாற்றாமல் இருந்தால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் தற்போது பயோ மெட்ரிக் கருவிகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டதால் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டு உள்ளது.

பழைய நடைமுறை

இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறுகையில், கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதற்காக தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பயோ மெட்ரிக் கருவி தேவைப்படுவதால், ரேஷன் கடைகளில் இருந்து தற்காலிகமாக வாங்கப்பட்டு உள்ளன.

தற்போது பயோ மெட்ரிக் கருவி இல்லாததால் எந்த முகவரியில் கார்டு உள்ளதோ அங்கு தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க முடியாது. வருகிற செப்டம்பர் மாதம் வரை இது நடைமுறையில் இருக்கும். தற்போது ரேஷன் கார்டு எண்ணை எழுதி வைத்து, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, ரசீது வழங்கி பொருட்கள் வினியோகம் செய்யும் பழைய நடைமுறை பின்பற்றப்படுகிறது என்றனர்

பொருட்கள் வாங்குவதில் சிக்கல்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேஷன் கார்டு எந்த முகவரியில் இருந்தாலும் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால் வெளியூரில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள், வாடகைக்கு வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்யவில்லை. தற்போது பயோ மெட்ரிக் கருவி திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதால் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க முடியாது என்கின்றனர். தற்போது முகவரி மாற்றம் செய்தாலும், சம்பந்தப்பட்ட கடைக்கு மாறுவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்கின்றனர். இதனால் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தற்போது வசிக்கும் பகுதிலேயே பொருட்கள் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்