10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்
திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் முதல்-அமைச்சர் கலந்துகொள்ளும் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21-ந் தேதி திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆகியோர் தலைமையில் நடந்தது. சி.என்.அண்ணாதுரை எம்.பி, எம்.எல்.ஏக்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி.அ.செ.வில்வநாதன், ப.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
10 ஆயிரம் பேருக்கு
தமிழக முதல்-அமைச்சர் பல்வேறு துறைகளின் சார்பில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட கலெக்டர் ஒரு குழு அமைத்து விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, கிராமப்பகுதியில் உள்ள பயனாளிகளின் விவரங்களை தனித் தனியாக தயாரிக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ளும் பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கி அவர்களுக்கு மட்டுமே விழாவிற்கு அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திருப்பத்தூரில் ரூ.110 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தையும், திருப்பத்தூர் டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாமேடை அமைக்கும் பணியையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், கண்காணிப்பு பொறியாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், துணைத்தலைவர் பிரியதர்ஷினி, நகரமன்ற தலைவர் சங்கீதா, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ்.அன்பழகன், ஒன்றியக்குழு தலைவர்கள் சத்யாசதீஷ், ப.ச.சுரேஷ்குமார், சங்கீதாபாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்.செல்வராசு, ஆம்பூர் நகரமன்ற துணை தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம், வாணியம்பாடி நகர மன்ற உறுப்பினர் வி.எஸ்.சாரதிகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.