வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைத்தால் போராட்டம் நடைபெறும் - ராமதாஸ் அறிவிப்பு
பன்னாட்டு மையத்தை கட்டி பெருவெளியை சிதைக்கத் துடிப்பதை அனுமதிக்க முடியாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைத்தால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
பெருவெளி அமைக்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகள் வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டிடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க வள்ளலார் மறுத்துவிட்டார்.
அதற்காக அவர் கூறிய காரணம், இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர்.
பெருவெளியின் தேவை 15 நாட்களுக்கு முன்பு கூட நிரூபிக்கப்பட்ட நிலையில், அதை உணராமல் அங்கு பன்னாட்டு மையத்தை கட்டி பெருவெளியை சிதைக்கத் துடிப்பதை அனுமதிக்க முடியாது. அடிக்கல் நாட்டுவதை அரசு ஒத்தி வைக்க வேண்டும்.அதற்கு மாறாக, வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்."
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.