அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கக் கோரி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு
அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்கக் கோரி விழுப்புரத்தில் வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, பிறகு தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 வழங்கக் கோரி விழுப்புரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். விழுப்புரம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் வரும் 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.