கோரிக்கைகளை வலியுறுத்தி 19-ந் தேதி போராட்டம் - ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாநாட்டில் தீர்மானம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 19-ந் தேதி போராட்டம் நடைபெறும் என ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 19-ந் தேதி போராட்டம் நடைபெறும் என ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில மாநாடு
மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் முதலாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநில தலைவர் முரளீதரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில பொருளாளர் முத்தையா தேசிய கொடியினை ஏற்றினார். சங்க கொடியை மாநில பொதுக்குழு உறுப்பினர் முனுசாமி ஏற்றினார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் வரவேற்றார். மூட்டா ஜி.சி.மனோகரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் கிரிஜா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். அனைத்துத்துறை ஓய்வூதியர் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் மாநாட்டு மலரை வெளியிட்டார். மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாநில துணைப்பொது செயலாளர் பிச்சைராஜன் மலரை பெற்றுக்கொண்டார்.
போராட்டம்
மாநாட்டை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ்நாடு பிரிவு செயல் தலைவர் துரைப்பாண்டியன், ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரபாகரன், லீலாவதி ஆகியோர் பேசினார்கள். மாநாட்டில், கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். காசில்லா மருத்துவம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஏப்ரல் 19-ந் தேதி தர்ணா நடத்துவது என்று மாநாட்டில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.