பட்டா கேட்டு போராடி வரும் மக்களுக்கு தீர்வு கேட்டு கிராம சபை கூட்டத்தில் போராட்டம்

79 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடி வரும் மக்களுக்கு தீர்வு கேட்டு கிராமசபை கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-15 19:10 GMT

போராட்டம்

திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெறும் அன அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு கூட்டம் தொடங்க இருந்தது. அப்போது 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமசபை கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கடந்த 1943-ம் ஆண்டுக்கு முன்பு வெங்களாபுரம் திருப்பத்தூர் நகராட்சியில் இருந்தது. அதன்பின் ஒரு பகுதி நகராட்சியில் இருந்து நீக்கப்பட்டு வெங்களாபுரம் கிராமத்தில் சேர்க்கப்பட்டது. மேலும் நில அளவை நகராட்சியில் இருந்து நீக்கப்பட்டு வெங்களாபுரம் கிராமத்தில் சேர்க்கப்பட்டது.

பட்டா வழங்கவில்லை

அப்படி கிராமத்தில் சேர்த்த பகுதிகளுக்கு இன்று வரை 79 ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை. இதனால் எங்கள் நிலத்தை பத்திரம் செய்யவோ, கடன் பெறவோ, மின்இணைப்பு பெறவோ முடியவில்லை. இதற்கு ஒரு முடிவு தெரியும் வரை கிராமசபா கூட்டம் நடத்தக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் சுதந்திர இந்தியாவில் எங்கள் கிராமம் அரசு பதிவேட்டில் இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய வேண்டும், நாங்கள் 79 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம், இதுவரை அதற்கு விடை கிடைக்கவில்லை என ஆவேசத்துடன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

6 மாதத்தில் தீர்வு

அப்போது வருவாய்துறையினர் உங்கள் கிராம மக்கள் பிரச்சினைக்கு 6 மாதத்தில் தீர்வு காணப்படும். அதுவரை பொறுத்துகொள்ளுங்கள் என கூறினர்.

அதைத்தொடரந்து சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பின் கிராமசபை கூட்டம் நடந்தது.

பொதுமக்களின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்