போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு போராட்டம்
விருதுநகர் போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பஸ்நிலையத்தில் பஸ்கள் முடங்கின.
விருதுநகர் போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பஸ்நிலையத்தில் பஸ்கள் முடங்கின.
முற்றுகை போராட்டம்
அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளன. நவம்பர் 5-ந் தேதிக்குள் நிலுவைத்தொகை வழங்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. ஆனால் இன்னும் நிலுவைத்தொகை வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.
இதனை தொடர்ந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினரும், ஓய்வூதியர் நல சங்கத்தினரும், போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி விருதுநகர் மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சுந்தர்ராஜ் தலைமையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க ஊழியர்களும், ஓய்வூதியர் நலச்சங்க உறுப்பினர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் முகாம்
இந்த போராட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. ஊழியர்கள் பங்கேற்றதாலும், பணி மாற்றத்திற்கான ஊழியர்கள் மண்டல அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாலும், பஸ்கள் விருதுநகர் பஸ் நிலையத்தில் முடங்கின. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பழைய பஸ் நிலையத்தில் இடம் இல்லாத நிலையில் புதிய பஸ்நிலையத்திலும் பஸ்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று மதியத்திற்கு பின்பு போக்குவரத்து கழக அதிகாரிகள் பஸ் நிலையத்தில் முகாமிட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். எனினும் பஸ்கள் தாமதமாகவே இயக்கப்பட்டன.
பஸ்கள் இயக்க நடவடிக்கை
இதுபற்றி போக்குவரத்து கழக கோட்ட மேலாளரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து செல்ல வேண்டிய 52 பஸ்களும் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தால் பஸ்கள் இயக்கத்தில் சிறிது தாமதம் ஏற்பட்டது. எனினும் பஸ் நிலையத்தில் அதிகாரிகள் முகாமிட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.
மற்ற கிளைகளில் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.