தார்ச்சாலை அமைக்காவிட்டால் போராட்டம்

நாகை அருகே தார்ச்சாலை அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2023-05-23 18:45 GMT

நாகை அருகே தார்ச்சாலை அமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

சேதமடைந்த சாலை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே காமேஸ்வரத்தில் இருந்து விழுந்தமாவடி மீனவர் காலனி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

வாகன ஓட்டிகள் சிரமம்

சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இந்த சாலை வழியாக விவசாயிகள் வாகனங்களில் காய்கறிகளை ஏற்றி கொண்டு விற்பனை செய்ய செல்லும் போதும் கடும் சிரமம் அடைகின்றனர்.

மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாததால் தவிர்க்க உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

போராட்டம்

மழைக் காலங்களிலும் சாலைகள் குண்டும், குழியுமாக மாறுவதால் அதில் தேங்கும் மழை நீரில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தெருமின்விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக விழுந்தமாவடி மீனவர் காலனிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காமேஸ்வரத்தில் இருந்து விழுந்தமாவடி மீனவர் காலனிக்கு செல்லும் கப்பி சாலையை சீரமைத்து தார்ச்சாலையாக அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே காமேஸ்வரத்தில் இருந்து விழுந்தமாவடி மீனவர் காலனி செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து, மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என அந்த பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்