மாவட்ட விளையாட்டு அலுவலர்- பயிற்சியாளரை விரைந்து கைது செய்ய கோரி போராட்டம்

மாவட்ட விளையாட்டு அலுவலர்- பயிற்சியாளரை விரைந்து கைது செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-19 20:15 GMT

பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதியில் தங்கி, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் தற்காப்பு பயிற்சியில் (டேக்வாண்டோ) ஈடுபட்டு வரும் மாணவிகளில், சிலரிடம் தற்காலிக டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் என்பவர் மது போதையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவித்தும், அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வரப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தர்மராஜன், சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செயலாளர் சின்னப்பொண்ணு தலைமையில், அச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மதியம் வந்து திடீரென்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கீதா கலந்து கொண்டு மேற்கண்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜனையும், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமாரையும் போலீசார் விரைந்து கைது செய்யக்கோரியும், தர்மராஜனை போல் சுரேஷ்குமாரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாவட்ட அரசு விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஸ்வரி, பொருளாளர் ஷர்மிளா பேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட வந்த மாதர் சங்கத்தினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தை கலெக்டர் அலுவலகத்தை விட்டு வெளியே வைத்து நடத்த வேண்டும் என்று கூறி தடுத்ததால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்