நடவடிக்கை கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்
வாடகை கேட்ட ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்திய சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமேசுவரம் தாலுகா பேக்கரும்பு கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் கவுதம். பட்டதாரியான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி பாம்பன் பகுதியை சேர்ந்த சிலர் ஆட்டோ வாடகைக்கு எடுத்து சென்று வாடகை தராமல் சென்றுள்ளனர். அவர் வாடகை கேட்டதால் ஆத்திரமடைந்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று கண்மூடித்தனமாக தாக்கியதில் அவர் மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை பேக்கரும்பு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.