மாணவி, பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தாமதம்; வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகை

வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வராததால் மாணவி, பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டது. இதனால் 2 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-04 19:27 GMT

வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வராததால் மாணவி, பெண்ணின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஏற்பட்டது. இதனால் 2 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

பிரேத பரிசோதனை

வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ராசம்மாள் (வயது 46). இவர், தனது மகள் சுகன்யா (25), பேரன் சித்தார்த் (2) ஆகியோருடன் மொபட்டில் வேடசந்தூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து உசிலம்பட்டி நோக்கி திரும்பி சென்றுகொண்டிருந்தனர். மொபட்டை சுகன்யா ஓட்டினார். உசிலம்பட்டி அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மொபட் மீது மோதியது. இதில் ராசம்மாள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகளும், பேரனும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்தநிலையில் ராசம்மாளின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. அதேபோல் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்த 15 வயது பள்ளி மாணவியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த 2 பேரின் உடல்களையும் வாங்குவதற்காக அவர்களின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து காத்திருந்தனர்.

உறவினர்கள் முற்றுகை

ஆனால் நேற்று மதியம் 1 மணி வரை ஆகியும் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்தது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகிகளிடம் 2 பேரின் உறவினர்களும் கேட்ட போது, பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் இன்னும் வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருதரப்பு உறவினர்களும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வேடசந்தூர் போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்காத இருதரப்பு உறவினர்களும் போலீசார், ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் சமரசம் செய்தனர். பின்னர் இறந்த 2 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் வேடசந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்