காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் கடையடைப்பு போராட்டம்
காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில்,
காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் 11-ந்தேதி(அதாவது நேற்று) கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி டெல்டாவின் கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் மருந்து, பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
சிதம்பரம் ரோடு, கடைவீதி, கச்சேரி ரோடு, ஓமாம்புலியூர் ரோடு, பஸ் நிலையம், டாணக்கார தெரு மற்றும் குமராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. இருப்பினும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே காட்டுமன்னார்கோவிலில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் இருந்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் காட்டுமன்னார்கோவில் தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், அவைத்தலைவர் கருணாநிதி, நகர செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான கணேசமூர்த்தி, காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன், தமிழ்நாடு பனை மர நல வாரிய உறுப்பினர் பசுமைவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், விவசாய சங்க தலைவர் ரெங்கநாயகி, வி.சி.க. நிர்வாகிகள் ஆற்றலரசு மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் நேற்று காலை வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதுபற்றி அறிந்த அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் அங்கு விரைந்து வந்து கடைகளை மூடுமாறு வியாபாரிகளிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து மேலவீதி, காசுக்கடை தெருவில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஆனால் இந்த கடையடைப்பு போராட்டம் சுமார் ½ மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் தலைமையில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் மேலவீதி வழியாக வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து அங்கு அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
55 பேர் கைது
இதில் கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கண்ணன், விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு, தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட செயலாளர் வி.எம் சேகர், சரவணன், விவசாய சங்க நிர்வாகிகள் கற்பனைச் செல்வன், வாஞ்சிநாதன், தமிமுன் அன்சாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்க தமிழ் மொழி உள்பட பலர் கலந்து கொண்டு கோாிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 55 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.