மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் படகில் சென்று போராட்டம்

கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 மீனவ கிராம மக்கள் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-31 06:41 GMT

வடசென்னை அனல் மின்நிலையத்தில் இருந்து மின்சாரத்தை வெளியிடத்துக்கு அனுப்ப கொசஸ்தலை ஆற்றின் மீது உயர்மின் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக மின்கோபுரம் அமைய உள்ள மீனவர்களின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த ஆற்றை நம்பி மீன்பிடி தொழில் செய்து வரும் எண்ணூரை சுற்றி உள்ள மீனவ கிராம மக்கள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கொசஸ்தலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும். மீன்பிடி தொழில் பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் மீனவ மக்கள் நலச் சங்கத்தினர் நேற்று படகுகளில் சென்று கொசஸ்தலை ஆற்றில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று காலை எண்ணூரை சுற்றி உள்ள தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம், எண்ணூர்குப்பம், பெரிய குப்பம், சின்னகுப்பம், முகத்துவாரகுப்பம், சிவன்படை குப்பம் ஆகிய 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் ராஜீ, செயலாளர் குமரன், பொருளாளர் குமரவேல் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் பைபர் படகுகளில் கருப்பு கொடியுடன் சென்று மின்கோபுரம் அமைய உள்ள இடத்தை முற்றுகையிட்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:-

கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல்மின் நிலையம் உயர் மின்கோபுரம் அமைத்து வருகிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் தடைபடும். மீன்பிடி பகுதியில் அமைப்பதால் எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும்.

உடனடியாக மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். இல்லாத பட்சத்தில் வரும் வெள்ளிக்கிழமை எண்ணூரில் அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டு குடும்பத்துடன் சென்று வடசென்னை அனல்மின் நிலையத்தை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்