தனியார் சேகோ ஆலை அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

தனியார் சேகோ ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-28 20:43 GMT

சேகோ ஆலை

சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் காட்டுக்கோட்டை ஊராட்சியில் தனியார் சேகோ ஆலை அமைக்க அரசு அனுமதி வழங்குவதை கைவிடக்கோரி ஐக்கிய விவசாயிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சேலம் கோட்டை பகுதியில் நடந்த இந்த உண்ணாவிரதத்திற்கு ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பெரியசாமி, வெற்றிமணி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக ஆறுகள் வள மீட்பு இயக்க நிர்வாகி குருசாமி கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான விவசாயிகளும், காட்டுக்கோட்டை ஊராட்சி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சிறப்பு தீர்மானம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காட்டுக்கோட்டை ஊராட்சியில் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அங்கு சேகோ ஆலை அமைக்கப்பட்டால் அதில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே தனியார் சேகோ ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே இது தொடர்பாக ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தை ரத்து செய்யக்கூடாது. மக்களின் போராட்டத்தை மீறி தனியார் சேகோ ஆலை அமைத்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்