சம்பள மறு நிர்ணயத்திற்கு எதிர்ப்பு: காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தொடர் போராட்டம்

சம்பள மறு நிர்ணயம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-02-13 21:06 GMT


சம்பள மறு நிர்ணயம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

கோஷம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், ஆசிரியரல்லாத பணியாளர்கள் காமராஜர் சிலையில் இருந்து துணைவேந்தர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அதாவது, பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் சம்பளத்தை மறுநிர்ணயம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாக கடந்த 7-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முதல் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தொடர வேண்டும்

முன்னதாக தமிழக முதல்-அமைச்சருக்கு சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி, சுமார் 30 வருடங்களாக பணியாற்றி வரும் பணியாளர்களின் சம்பளத்தை மாற்றியமைக்க முயற்சிக்கும் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். இதற்காக, கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை எண்.282-ஐ திரும்ப பெற வேண்டும். பல்கலைக்கழக ஆட்சியதிகார விதிமுறைகளை பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆட்சிமன்றக்குழு கடந்த மார்ச் மாதம் சம்பள மறுநிர்ணயம் மற்றும் கூடுதல் சம்பளத்தை திரும்ப பெறுதல் குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், இந்த தீர்மானம் 2017-ல் வெளியிடப்பட்ட அரசாணை எண்.303 க்கு எதிரானது. பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 1988-ம் வருடத்தில் இருந்து பணியாளர்களுக்கான சம்பள நிர்ணயம் முறைப்படி விதிகளை பின்பற்றி வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தின் உயரிய அமைப்பான ஆட்சிப்பேரவை ஏற்கனவே ஆட்சிமன்றக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெறுவதாக தீர்மானம் இயற்றியது. அந்த தீர்மானத்தின் தற்போதைய நிலை தொடர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்