கவர்னரை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் கூறினாா்.
திருத்துறைப்பூண்டி;
கவர்னரை மத்திய அரசு திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று முத்தரசன் கூறினாா்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கான தேர்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படைக்கு வீரர்களை சேர்க்கும் பணிக்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட உள்ள நிலையில் இதற்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.இது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
தொடர் போராட்டம்
தமிழக கவர்னரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவது மட்டுமின்றி அவரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் வரை தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். இதன் தொடக்கமாக நாளை(புதன்கிழமை) சென்னையில் தி.மு.க. சார்பிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கண்டனம்
தமிழக கவர்னர், கவர்னராக செயல்படாமல் அத்துமீறி செயல்படுகிறார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிரிழந்தவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கவா்னர் பேசி உள்ளார்.வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கவர்னர் ரவி கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.திரும்பப்பெறக்கோரி போராட்டம்கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் நாம் அனைவரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.