கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டுவதை கண்டித்து பா.ம.க. போராட்டம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

கொசஸ்தலை ஆற்றில் புதிய அணை கட்டுவதை கண்டித்து பா.ம.க சார்பில் வரும் 30-ம் தேதி போராட்டம் நடத்தப்பட உள்ளது என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Update: 2022-08-26 06:38 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கான நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டு உழவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான ஆந்திர அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கொசஸ்தலை ஆறு ஆந்திரத்தில் உருவானாலும் கூட, அது பயணிப்பது தமிழ்நாட்டில் தான். ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் உருவாகும் கொசஸ்தலை ஆறு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக தமிழகத்திற்கு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு கொசஸ்தலை ஆறு தான் பாசன ஆதாரமாக திகழ்கிறது

அதுமட்டுமின்றி, தாமரைப்பாக்கம் அணை, வள்ளூர் அணை, வெளியகரம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றை நிரப்பும் கொசஸ்தலை அதன் பின் சென்னை எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது.

கொசஸ்தலை ஆற்றுப்படுகையின் மொத்தப்பரப்பு 3,727 சதுர கி.மீ ஆகும். இதில் 877 சதுர கி.மீ மட்டும் தான் ஆந்திரத்தில் உள்ளது. மீதமுள்ள 2,850 சதுர கி.மீ படுகை தமிழ்நாட்டில் தான் உள்ளது.

அதுமட்டுமின்றி, கொசஸ்தலை ஆறு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறு ஆகும். அத்தகைய ஆறுகளில் கடைமடை பாசனப் பகுதியான தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் அணைகளை கட்ட முடியாது.

இந்த விதிகள் ஆந்திர மாநில அரசுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அதை மதிக்காமல் தடுப்பணைகளை கட்ட ஆந்திர அரசு அனுமதி அளிக்கிறது என்றால், தமிழகத்துடனான நல்லுறவை ஆந்திரா மதிக்கவில்லை என்பது தான் பொருள். ஆந்திரத்தின் இந்த அத்துமீறலை அனுமதிக்க முடியாது.

சித்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஏற்கனவே ஆந்திர அரசு ஓர் அணை கட்டி உள்ளது. இப்போது மேலும் இரு அணைகள் கட்டப்பட்டால் கொசஸ்தலையாற்றில் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வராது.

அதனால் ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை இழந்து விடும். ஒரு கோடிக்கும் கூடுதலான மக்களை கொண்ட சென்னை மாநகரத்திற்கும் குடிநீர் கிடைக்காது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

2017-ம் ஆண்டில் கொசஸ்தலை ஆற்றிலும், அதன் துணை ஆறுகளிலும் 5 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டது. அதை எதிர்த்து அப்போது நான் தான் முதலில் குரல் கொடுத்தேன். புதிய தடுப்பணைகள் கட்டப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தினேன்.

அதைத்தொடர்ந்து மற்ற கட்சிகளும் தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதன் காரணமாக அப்போது புதிய தடுப்பணைகள் கட்டும் திட்டம் கைவிடப்பட்டது.

கொசஸ்தலை ஆற்றில் புதிய அணைகள் கட்டப்படுவதை கைவிட வலியுறுத்தியும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளக்கோரியும் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரத்தில் வரும் 30-ந்தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது. அந்தப் போராட்டத்திற்கு நான் தலைமையேற்க உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்