கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட்தளம் அமைக்க எதிர்ப்பு: 8 நாட்களாக விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வாபஸ்- அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 நாட்களாக விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் சு.முத்துசாமியுடனான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

Update: 2023-07-14 21:54 GMT

நம்பியூர்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 நாட்களாக விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அமைச்சர் சு.முத்துசாமியுடனான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.

விவசாயிகள் எதிர்ப்பு

நம்பியூர் அருகே எலத்தூர் செட்டிபாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், அரசூர், குருமந்தூர், கரட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இதில் ஆண்டிபாளையம், கடத்தூர் ஆகிய இடங்களில் சுமார் 3 கி.மீ. அளவுக்கு வாய்க்காலின் ஒரு பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

தற்போது அதே அளவு வாய்க்காலின் மற்றொரு பகுதியிலும் கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கசிவு நீர் குட்டைகளின் தண்ணீர் வரத்து முற்றிலுமாக தடைபடும் என கூறி அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காத்திருப்பு போராட்டம்

இதைத்தொடர்ந்து விவசாயிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். எலத்தூர் செட்டிபாளையத்தில் பந்தல் அமைத்து கடந்த 8 நாட்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் வீட்டுவசதிதுறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று முன்தினம் இரவு போன் மூலம் விவசாயிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமைச்சர் உறுதி

அப்போது விவசாயிகளிடம் அமைச்சர் கூறும்போது 'எலத்தூர் செட்டிபாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் 25 அடி தூரத்துக்கு மட்டுமே அமைக்கப்படும். மீதமுள்ள இடத்தில் கற்கள் மட்டும் கொண்டு பதிக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் கசிவு நீர் குட்டைகளை பாதிக்கும் இடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்படாது' என்று உறுதி அளித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கடத்தூர் போலீசாரும் போராட்டம் நடக்கும் பந்தலுக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அமைச்சர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது. கடந்த 8 நாட்களாக நடத்திய போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்