பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பி.பள்ளிப்பட்டி ஊராட்சியில் வாசிக்கவுண்டனூர் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பஸ் நிறுத்தம் அருகே பொம்மிடி-அரூர் சாலையில் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராம விஜயரங்கன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சீராக வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.