பரமத்திவேலூர்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் பரமத்தி வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பரமத்தி ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பரமத்தி ஒன்றியத்தில் தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இடமாறுதல் பணியில் கலந்தாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.