நாமக்கல்:
தூத்துக்குடி படுகொலையை கண்டித்து நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் செல்வகிருஷ்ணா, நல்லியப்பன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பணி பாதுகாப்பு
சங்க நிர்வாகிகள் நவீன்ராஜ், தனபால், தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்மணி, பிரசார செயலாளர் சிவகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முடிவில் வட்ட பொருளாளர் விஜய பூபதி நன்றி கூறினார்.