கிருஷ்ணகிரி:
தூத்துக்குடியில் நடந்த படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலையை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோட்ட செயலாளர் சங்கர், வட்ட செயலாளர் முத்துராமன், தலைவர் சரவணன், பொருளாளர் இளவரசன் உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரை கொலை செய்த குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பணி பாதுகாப்பு
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் கொலையை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.