தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2023-04-25 18:45 GMT

தர்மபுரி:

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கால முறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட செயலாளர் கவிதா, மாவட்ட பொருளாளர் தெய்வானை, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட செயலாளர் ஜீவா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், ஜாக்டோ- ஜியோ நிதி காப்பாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

காலி பணியிடங்கள்

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும். மைய பணியை செய்வதற்கு அரசு வழங்கிய செல்போன்கள் காலாவதியானதால் தரமான புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் கோடை விடுமுறையை ஒரு மாதம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்களுக்கு அரசு வழங்கும் சிலிண்டருக்கான முழு பில் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. நேற்று இரவு வரை இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்